History

வரலாறு

தமிழ்நாட்டின் பரப்பளவில் பெரிய மாவட்டங்களில் ஒன்றான திருவண்ணாமலை மாவட்டம் வட தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் நீண்ட மலைத் தொடர்களில் ஒன்றான கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒர...

திருவண்ணாமலை மாவட்டம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

தமிழ்நாட்டின் பரப்பளவில் பெரிய மாவட்டங்களில் ஒன்றான திருவண்ணாமலை மாவட்டம் வட தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் நீண்ட மலைத் தொடர்களில் ஒன்றான கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பிரிவான ஜவ்வாதுமலை தொடர் திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கெல்லையாக அமைந்துள்ளது. எஞ்சிய பகுதியான செங்கம் கணவாய் ஜவ்வாதுமலைக்கும் கல்வராயன் மலைக்கும் இடைப்பட்ட ஒரு சிறுபரப்பில் அமைந்துள்ளது. இந்த செங்கம் கணவாய் வடபுறத்து மக்கள் மேற்குப் பகுதிக்கு செல்லும் பண்டைய கால வழித்தடம் ஆகும். மறுபுறம் திருவண்ணாமலை மாவட்டத்தின் வட எல்லையாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களும் கிழக்கு எல்லையாக காஞ்சிபுரம் மாவட்டமும் தென் எல்லையாக விழுப்புரம் மாவட்டமும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களும் அமைந்துள்ளன.

இந்த மாவட்டத்தின் எல்லையிலும் மாவட்டத்தின் உள்ளும் அமைந்துள்ள ஜவ்வாதுமலையும் அதனின்று உற்பத்தியாகும் சேயாறு என்கிற செய்யாற்றின் பகுதிகளிலும் மேற்குப்பகுதியில் இருந்து செங்கம் கணவாய் வழியாக ஓடும் தென்பெண்ணையாற்றுப் பகுதியிலும் வேட்டவலம் பகுதியிலிருந்து தேசூர்- வந்தவாசி வரை விரிந்துள்ள செஞ்சிக்குன்றுகளிலும் வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கிடைக்கின்றன.

மனிதர்கள் வாழ்ந்த தடையங்கள் கிடைத்த பகுதிகள் அனைத்தும் ஒரு வகையில் ஒரு மலையும் மற்றும் நீர்நிலையுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளது. மனிதர்களுக்கு தங்கும் இடமும் உணவும் முக்கிய தேவையாக வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களுக்கு இருந்துள்ளது. இந்த இரண்டும் எளிதாக கிடைக்கக்கூடிய பகுதிகளிலேயே இவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்கள் என்பது களஆய்வுகளில் தெரியவருகின்றன.

தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கால வகைபாடுகளுக்கு ஏற்ப தொல்பழங்காலத்தை பழைய கற்காலம் புதிய கற்காலம் பெருங்கற்காலம் அல்லது இரும்புக்காலம் என்ற பிரிவுகளில் கிடைத்துள்ள தடயங்களை வகைப்படுத்தலாம்.

திருவண்ணாமலை மாவட்டம் வடதமிழகத்தின் பெரிய மாவட்டமாக அமைந்துள்ளது (6188 ச.கி.மீ) இம்மாவட்டத்தை ஒட்டியுள்ள வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களும் இம்மாவட்டத்தைப் போன்றே பல தொல் மனிதர்கள் வாழ்ந்த எச்சங்களைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் குடியம், அத்திரம்பாக்கம், பரிகுளம், சென்றாயம்பாளையம் ஆகிய இடங்களில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்கள் கிடைத்துள்ளன. திருவள்ளூருக்கு அருகில் உள்ள மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் அமைந்திருந்தாலும் இம்மாவட்டத்தில் பழைய கற்காலத்தைச் சார்ந்த இடங்களே, கற்கருவிகளோ இதுவரை கண்டறியப்படவில்லை.

புதிய கற்காலம்

புதிய கற்காலம் என்று வரலாற்றறிஞர்களால் குறிப்பிட்டுள்ள கி.மு. 1000 முதல் கி.மு. 5000 வரையான காலத்தைச் சேர்ந்த பல தொல்லியல் தடயங்கள் இம்மாவட்டத்தில் கிடைத்துள்ளன. புதிய கற்கால மனிதர்கள் நாடோடி வாழ்க்கையை விட்டு ஒரிடத்தில் குழுவாக வாழும் முறைக்கு மாறினர். நீர் சுனைகள், மலைகள், ஓடைகள், அருவிகள் போன்ற இடங்களிலும் பெரும் பாறை இடுக்குகளில் இயற்கையாக அமைந்துள்ள குகைபோன்ற பகுதிகளிலும் புதிய கற்கால மனிதர்களின் தடயங்கள் தெரியவருகின்றன. புதிய கற்கால மனிதர்கள் தடயங்கள் பாறை ஓவியங்களாக, கற்கருவிகளாக, கருவிகளை கூர் தீட்ட பயன்படுத்திய இடங்களாக நமக்கு கிடைக்கின்றன.

பாறை ஓவியங்கள் (Rock Arts)

புதிய கற்கால மக்கள் வேளாண்மைக்கு நுழைந்த காலத்திலும் இவர்களது வேட்டையாடும் தொழில் தொடர்ந்திருந்தது. அல்லது வேட்டையாடுவதே இவர்களின் முக்கிய பண்பாடாகவும் அன்றாட உணவுக்கும் தேவையானதாக இருந்துள்ளது. இவர்கள் தங்களுக்கு கிடைத்த நேரத்தில் தாங்கள் நேரில் கண்ட காட்சிகளை, நேரில் கண்ட விலங்குகளை, மனிதர்களை ஓவியமாக தாங்கள் வசிக்கும் பகுதியில் வரைந்துள்ளனர். இவ்வகை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் எல்லாம் ஒருபெரிய பாறையின் உட்புற சரிவுகளில் கைக்கு எட்டிய அளவில் மிக அழகான நுணுக்கமான ஓவியங்களை காணலம். இவ்வோவியங்கள் சற்றொப்ப 5000 ஆண்டுகளுக்கு மேலாகவும் இன்னும் அழியாமல் உள்ளன. ஒரு சில ஓவியங்கள் காலப்போக்கில் நீர் வழிந்தோடுவதாலும் பூச்சிகளின் கூடுகளாலும் சிதைந்துள்ளன. அண்மைய காலத்தில் பல மனிதர்களால் சிதைக்கப்பட்டுள்ளன. எனினும் இவ்வளவு காலம் கடந்தும் நமக்கு கிடைப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய வண்ணங்களுக்கான நிறமிகள் முக்கிய காரணியாக உள்ளன. இவ்வோவியங்கள் செந்சாந்து என்று அழைக்கப்படுகின்ற ஒரு சிவப்பு நிற ஓவியங்களும் அதனுடன் மஞ்சள் அல்லது வெந்திய நிற ஓவியங்கள் உட்பகுதியில் தேவைக்குப் பயன்படுத்தும் அளவில் வெண்சாந்து ஓவியங்களும் காணக்கிடைக்கின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியூர் என்ற இடத்தில் கிடைத்த புதிய கற்கால ஓவியங்கள் பெருமளவில் சிதைக்கப்பட்டுள்ளன. கிடைத்த ஓவியங்களின் வழியாக நோக்கும் போது இது சில மனிதர்கள் அல்லது விலங்கனி வடிவங்களை வரைந்ததாக கொள்ளலாம். நேர்த்தியான சிவப்பு வண்ணங்கள் மஞ்சள் வண்ணங்கள் கலந்து வரையப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள மற்றொரு பாறையில் இரண்டு இடங்களில் புதிய கற்கால ஓவியங்கள் காணக்கிடைக்கின்றன. இதில் ஒரு ஓவியம் பெரிய விலங்கின் உருவத்தைப் போலவும் மற்றொன்று ஒரு வீடுபோன்ற இருப்பிடம் அல்லது பல்லக்கு போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. இதன் அருகில் விலங்குகளும் மனிதர்களும் காட்டப்பட்டுள்ளனர்.

வேட்டவலம் அடுத்துள்ள பாப்பன்கொட்டாய் என்ற இடத்திலுள்ள சிறிய மலைக்குன்றின் பாறையொன்றில் செஞ்சாந்து நிற ஓவியம் அண்மையில் கண்டறியப்பட்டது. இதில் இரண்டு மான்கள் அருகருகே நிற்பது போன்று வரையப்பட்டுள்ளது. மானின் கொம்புகள் நீண்டும் சரி அளவிலான உடலுடன் காணப்படுகிறது. இவ்வூருக்கு அடுத்துள்ள நீலந்தாங்கல் கிராமத்தில் சொரட்டு கோல் மலையில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வோவியங்கள் அனைத்தும் தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியத் தொகுப்புகள் கண்டறியப்பட்ட கீழ்வாலை மற்றும் செத்தவரை ஓவியங்களின் அருகில் அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாறைக்கீறல்கள் (Petroglyphs)

புதிய கற்கால மக்களின் கற்பனைக்கும் கருத்து வெளிப்பாட்டிற்கும் ஆன தடயங்களாக கிடைப்பன பாறைக்கீறல்கள், இதில் விதிவிலக்காக அரிய வகையான ஒரு பாறைக்கீறல் தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூரில் 3 இடங்களில் கிடைக்கிறது. இது பெரும்பாறை ஒன்றின் ஒரு பக்கத்தில் பல நேர்கோடுகள், முக்கோணம், நாமம் போன்ற குறியீடு, நிலத்தைக் குறிக்கும் குறியீடு உள்ள பல விளக்க இயலாத குறிகளும் உள்ளன. இவ்வூரில் வவ்வால் பொடவு என்ற இடத்தில் உள்ள பாறையில் பல கோட்டுருவங்கள், வளைவுகள், மனித உருவம் ஆகியன காணப்படுகின்றன. இக்குறியீடுகள் சில சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த குறியீடுகளுக்கு ஒப்பானவை என்றும் கருதப்படுகிறது.

கருவிகள் (tools)

உணவுக்காவும் விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவும் புதிய கற்கால மனிதனின் தேவையாக இருப்பது ஆயுதங்கள் அதாவது கற்கருவிகள். கற்கருவிகள் பலவகையாக பிரிக்கலாம். கோடரிகள் (axes), வெட்டுக்கற்கள், (Cleavers) சுத்தி(dabber) போன்ற கற்கள் ஆகியன. இந்த கற்களில் அதிக அளவிலான கற்கோடரிகள் ஜவ்வாது மலையின் கீழானூர், பாதிரி, மேல்பட்டு போன்ற பகுதிகளில் கிடைக்கின்றன. சுத்தி வகையிலான கருவி கீழ்கோவிலூரில் கிடைக்கின்றன. தண்டராம்பட்டு வட்டம் கீழ்வலசையிலும் கற்கருவிகள் கிடைக்கின்றன. இன்றும் பல இடங்களில் கற்காலக் கருவிகளை மலைவாழ் மக்கள் கோயில்களில் வைத்து கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

கற்பள்ளங்கள் (Grooves)

புதிய கற்கால மனிதர்கள் கருவிகள் உருவாக்க கற்களை கூர் தீட்டவேண்டும் அதற்கு கடினமான பாறையும் கூர் தீட்டும் போது ஏற்படும் வெப்பத்தைத் தணிக்க அருகில் தண்ணீர் வேண்டும். அதற்கேற்றாற் போல சுனை அமைந்துள்ள பாறையில் இந்த கருவிகளை கூர் தீட்டும் பணிகளைச் செய்துள்ளனர். ஒரு பள்ளம் பெரியதாக மாறியதுடன் அடுத்த இடத்தைச் தேர்ந்தெடுக்கின்றனர். ஜவ்வாதுமலையில் பாதிரி, கீழானூர், மேல்பட்டு பகுதிகளில் இது போன்று பல கற்தேய்புக்குழிகள் அமைந்துள்ள இடங்கள் புதிய கற்காலத் தடங்களாக அறியலாம்.

பெருங்கற்காலம்

புதியகற்காலத்திலிருந்து வளர்ச்சியடைந்த காலம் பெருங்கற்காலம். பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவில் கிடைக்கின்றன. கல்வட்டம், கல்திட்டை, குத்துக்கல், கற்குவை ஆகியவற்றின் உள்ளே தாழி மற்றும் பேழை போன்ற நீத்தார் நினைவுச்சின்னங்களுன் கிடைக்கின்றன. இம்மாவட்டத்தில் கல்வட்டங்கள் அதிக அளவிலும் கல்திட்டைகள் குறைந்த அளவிலும் உள்ளன. இப்பகுதி மக்கள் பெருங்கற்கால சின்னங்களை பாண்டவர் வீடு என்றும் பாண்டவர் கோயில் என்றும் அழைக்கின்றனர். இது மாண்டவர் வீடு என்பது சொல்வழக்கில் மருவி பாண்டவர் வீடு என்று வந்தது. முதுமக்களைப் புதைக்கப் பயன்பட்ட சால் என்பதால் இதற்கு முதுமக்கள் சால் என்று பெயர் வந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடத்தில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கிடைத்துள்ளன. பல இடங்களில் 500க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. ஒட்டு மொத்தமாக சுமார் 1500க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணக்கிடைக்கின்றன. எனவே இவற்றில் முக்கிமான பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் சில நினைவுச்சின்னங்கள் மட்டும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

பெருங்கற்காலச் சின்னங்களை அவற்றின் அமைப்பைக் கொண்டு வேறுபடுத்தலாம். அவை. 1. கல்வட்டம். 2. கல்பதுக்கை, 4.கல்திட்டை, 4. கற்குவை, 5. குத்துக்கல்.

கல்வட்டம் (Cairn circle)

கல்வட்டம் என்பது இறந்தவர்களின் உடல் பகுதிகளை வைத்து அல்லது அவர்களின் நினைவாக எடுக்கப்படும் ஈமச்சின்னங்களின் மேற்பரப்பில். கற்பாறைகளைக் கொண்டு ஒரு வட்டம் உருவாக்கப்படுகிறது. இது தரையின் மேற்பரப்பில் காணப்படும். பெருங்கற்காலக் கல்வட்டங்களின் புதைந்த பகுதியில் தாழிகள், குழிகள், கற்பதுக்கைகள் போன்றவை காணப்படும்.

வீரணம் : தண்டராம்பட்டு அடுத்த வீரணம் கிராமத்தில் பொன்ராயர் கோயிலுக்கு அருகில் உள்ள காட்டில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. 2011 ஆண்டு மேற்பரப்பு ஆய்வு செய்யப்பட்டது. இங்கு கற்பதுக்கைகளைச் சுற்றி கல்வட்டங்கள் அமைந்துள்ளன. வீரணம் கிராமத்தில் பெருங்கற்காலப் நினைவுச்சின்னங்களான கல்வட்டம், கல்பதுக்கை, கல்திட்டை, நடுகல் என அனைத்து வகைகளும் ஒரே இடத்தில் கிடைப்பது அரிதான ஒன்றாகும்.

தா.மோட்டுர்.

தானிப்பாடி அருகே மோட்டூரில் சுமார் 90 கல்வட்டங்கள் இருந்தன. காலப்போககில் பல அழிந்து விட்டன. தற்போது 10 க்கும் குறைவான கல்வட்டங்களே காணப்படுகின்றன. இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இவ்விடத்தில் 1978 ஆண்டு அகழாய்வு செய்துள்ளனர். இந்த கல்வட்டங்கள் ஆய்வு செய்த போது இரும்புக்கால மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், இரும்புக்கத்தி போன்றவை கிடைத்துள்ளன. தா. மோட்டுர் கல்வட்டத்தில் அமைந்துள்ள தாய்தெய்வக்கல் தமிழகத்தின் முதல் வழிபாட்டு சிலை என்றும் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இதன்காலம் கி.மு. 1000 அதாவது 3000 ஆண்டுகள் பழமையானது.

கீழ்நமண்டி

வந்தவாசி வட்டம் கீழ்நமண்டி கிராமத்தில் ஏரிக்கு அருகே உள்ள பரப்பில் 25 க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் உள்ளன. இப்பகுதியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினால் 2023 மற்றும் 2024 ஆம் அகழாய்வு செய்யப்பட்டது. இதுவரை 11 கல்வட்டங் களை குழி தோண்டி அகழாய்வு செய்துள்ளனர். 11 கல் வட்டங்களிலும் தலா ஒன்று முதல் 3 ஈமப் பேழைகளும், சிகப்பு மற்றும் கருப்பு சிகப்பு பானைகளும் புதைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஈமப் பேழைகள் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சுடு மண்ணால் 13 கால்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள ஈமப் பேழைகள் அனைத்தும் தலா சுமார் மூன்றரை அடி நீளமும், 2 அடி அகலமும், ஒரு அடி உயரமும் கொண்டவையாக உள்ளன.

இதுபோன்ற கல்வட்டங்கள், தானகவுண்டன்புதூர், தொரப்பாடி, பெரியகோளாப்படி, சாத்தனூர், வெறையூர், மகமாயி திருமணி, ஆச்சமங்கலம், அரசாணிப்பாலை, எச்சூர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ளன.

கல்பதுக்கை (Cist)

கல்பதுக்கை என்பது இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக தரைமட்டத்திற்கு கீழே அமைக்கப்பட்ட அமைப்பாகும். கல்திட்டைகளைப் போலவே இதிலும் இடப்படும் ஈமப்பொருட்கள் ஒரே விதமானதாகும். இறந்தவுடன் பிணத்தைப் பலநாட்கள் திறந்த வெளியில் போடப்படும் பின்னர் எஞசியுள்ள எலும்புத்துண்டுகளைப் பொறுக்கி அணிகலன்கள் மட்கலங்கள், இரும்பு ஆயுதங்கள் ஆகியனவும் இக்குழிகளில் இடப்படுகின்றன. கல்திட்டையிலும் கல்பதுக்கையிலும் நான்கு பக்கங்களில் கிழக்குப் பக்கத்தில் இடுதுளை (Port hole) ஒன்று இடப்பட்டுள்ளது. இந்த வகை ஈமச்சின்னம் வீரணம், வேப்பூர் செக்கடி, எச்சூர், ஜவ்வாதுலை பகுதிகளில் அதிக அளவில் உள்ளது.

கல்திட்டை (Slab Cist or dolmen)

கல்திட்டை எனப்படும் ஈமச்சின்னம் பொதுவாக பூமியின் மேல் நான்கு பெரிய பலகைக்கல்லை பக்கங்களில் நிறுத்தி அதன் மேல் ஒரு பலகைக்கல்லை மூடுகல்லாக (Cap stone) வைத்து கல்லறை உருவாக்கப்படுவதாகும். கிழக்குப்பக்க கல்லில் ஒரு பெரிய துளை ஒன்றும் போடப்பட்டிருக்கும். இது போன்ற அமைப்பு பர்வதமலை, தொண்டமானூர், வீரணம், வேட்டவலம், சவ்வாதுமலையில் கீழ்சேப்பிளி என்ற கிராமத்தில் நிறைய காணப்படுகின்றன. இவற்றின் அமைப்பையொட்டி 3 வகைகளாக பிரிப்பர்.

முதல்வகை கல்திட்டை சதுரம், செவ்வகம் வடிவில் கற்களை ப வடிவில் மூன்று பக்கமும் நிறுத்தி அதன் மேல் மூடுகல் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். கிழக்கு பக்கம் மூடப்படாமல் விடப்பட்டிருக்கும். இச்சின்னங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து 5 அல்லது 6 சின்னங்களாக சேர்ந்து இருக்கும். இரண்டாம் வகை ஈமச்சின்னங்களில் 3 பக்கமும் ப வடிவில் பலகைக்கல்லை அமைத்து கற்கள் சாயாமல் இக்க பக்கவாட்டில் சிறிய கற்களை நிறுத்திவைப்பர். கிழக்குப்பக்கம் மூடப்படாமல் கல்லறை நுழைவாயில் போல இருக்கும். இவை தனித்தனியே அமைந்திருக்கும். மூன்றாம் வகை நான்கு புறமும் பெரிய பலகைக்கல்லை வைத்து மேல்பகுதியில் மூடுகல்லை வைத்து மூடிவிடுவர், கிழக்குப்பக்கம் கல்லில் மட்டும் வட்டமாக ஒரு துளை அமைந்திருக்கும்.

இவ்வகையான கல்திட்டைகள் ஜவ்வாதுமலை கீழ்சேப்பிளி, பதிமலை போன்ற இடங்களில் உள்ளன. ஆனால் தற்போது இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் அமைப்பை நோக்கும் போது ஒவ்வொரு வகையான ஈமச்சின்னங்களும் அங்கு வசித்த ஒவ்வொரு இனக்குழுவினருடையது என்றும் இதன் மூலம் சவ்வாது மலையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு வகையான இன மக்கள் குழுவாக வாழ்ந்து வந்துள்ளனர் எனத் தெரியவருகிறது. இதுபோன்று திருவண்ணாமலை அருகே சம்பந்தனூர், செய்யாறு அடுத்த எச்சூர் அருகே பல கல்திட்டைகள் கிடைக்கின்றன.

கற்குவை(Cairns)

இறந்தவர்களின் நினைவிடத்தில் மண்ணைக் குவிப்பதற்குப் பதிலாக துண்டுக்கற்களைக் அடுக்கி சிறு கோபரம் போன்று ஏற்படுத்தும் வகையாகும். சவ்வாதுமலையில் கீழ்சேப்பிளி கிரமத்தில் அமைந்துள்ள பல்வேறு ஈமச்சின்னங்களில் கற்குவைகளும் அடங்கியுள்ளது. ஒரு சில கல்திட்டைகளுடன் இணைந்தவாறும் அமைந்துள்ளது. இவ்வகையான ஈமச்சின்னங்கள் கற்குவை எனப்படும்.

நெடுங்கல் (அ) குத்துக்கல்.(Menher)

நெடுங்கல் என்பது ஒரு பெருங்கற்கால ஈமச்சின்ன வகையாகும். இக்கல் இறந்தவர்கள் நினைவாகவோ அல்லது இறந்தவர்களைப் புதைத்த இடத்திலோ எழுப்பப்படுகின்றது. இதன் கீழே முதுமக்கள்தாழி காணப்படலாம் அல்லது எந்தவித ஈமப்பொருட்கள் இல்லாமலும் இருக்கலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுபோன்ற நெடுங்கற்கள் கீழ்நமண்டி, தா. மோட்டூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

ஈமப்பேழை (Sarcophagus)

இது கல்வட்டம் அல்லது கல்பதுக்கைக்கு உள்ளே இருக்கும் பொருளாகும். இது தொட்டிபோன்ற அமைப்பு உடைய பேழை (Sarcophagus) என்பது மண்ணால் செய்து சுடப்ட்டிருக்கும், பேழையில் அடிப்பகுதியில் இரண்டு வரிசையில் நான்கு கால்கள் முதல் பல கால்கள் வரை கிடைக்கின்றன. இப்பேழையை மூடுவதற்கு மேல் மூடி ஒன்று அலங்கார வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றனது. பேழை மணல் கலந்த மண்ணாமல் செய்யப்பட்டிருக்கும் அதன் ஓடுகள் சொரசொரப்பாகவும் தடித்தும் காணப்படுகின்றன. பேழையின் உட்பகுதியில் எலும்பு மற்றும் படையல் பொருட்கள் வைத்த பின்னர் மூடி கொண்டு மூடப்பட்டிருக்கும். சில பேழைகள் ஆடு, மாடு அமைப்புகளிலும் இருக்கும். இவை கல்வட்டம், கற்குவை,கற்பதுக்கை போன்ற பெருங்கற்கால ஈமச்சின்னங்களின் உட்பகுதியில் காணப்படுகின்றன. மகமாயி திருமணி ஈமப்பேழை நல்ல நிலையில் எடுக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

இரும்பு உருக்கு ஆலைகள் (Iron Smelting centers)

இக்கால மக்கள் இரும்பின் பயனை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். பெரும்பாலான குழிகளில் இருப்புக்கத்தி, இரும்பாலான பிற பொருட்கள் கிடைக்கின்றன. இவர்களுக்கு இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்யும் தொழில் நுட்பங்கள் தெரிந்துவைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே உள்ள கொழுந்தம்பட்டு, வீரணம், காயம்பட்டு, திருவண்ணாமலை அருகே உள்ள பாலியப்பட்டு போன்ற இடங்களில் இரும்பு உருக்காலைகள் செயல்பட்டதற்கான தடயங்கள் கிடைக்கின்றன.

பாறை ஓவியங்கள்

பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் சில புதிய கற்கால பாறை ஓவியத் தொகுதியுடன் இணைந்தும் சில இடங்களில் தனித்தும் காணப்படுகின்றன. நீலந்தாங்கல், பாறை ஓவியத்தில் புதிய கற்கால ஓவியத் தொகுதியின் உள்ளும், பன்னியூரில் ஒருசில இடங்களிலும் உள்ளன. பெருங்கற்கால ஓவியங்கள் மட்டுமாக ஜவ்வாதுமலை அடிவாரம் கல்பட்டு கிராமத்திலும் நெய்வாநத்தம் கிராமத்திலும் காணக்கிடைக்கின்றன.

பண்பாடு (Culture)

தென்னிந்தியாவில் காணப்படும் பெருங்கற்காற நினைவுச்சின்னங்கள் போன்றே மத்தியதரைக்கடல் பகுதியிலும் ஐரோப்பாவின் பலஇடங்களிலும் கிடைக்கின்றன. இது பண்டைய தமிழகத்திற்கும் ஐரோப்பாவிற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துகின்றன. மேலும் தமிழகத்தில் ஆய்வு செய்த சில பெருங்கற்கால சின்னங்களில் ரோமன் நாணயங்கள் கிடைக்கின்றன.

பெருங்கற்கால மக்கள் வேளாண்மை நன்கு தெரிந்து வைத்திருந்தனர். ஈமக்குழிகளில் கிடைக்கும் பானைகளில் நெல் அல்லது அதன் உமி பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன. சில இடங்களில் பருத்தி போன்ற துணிகளும் கிடைத்துள்ளன. எனவே, இக்கால மக்களுக்கு நெல், பருத்தி போன்றவற்றை பயிரிட்டார்கள் எனத் தெரியவருகிறது.

ஈமச்சின்னங்கள் ஒரே இடத்தில் அதிக அளவு காணப்படுவதால் அக்கால மக்கள் ஒரே இடத்தில் குழுவாக வாழ்ந்து வந்துள்ளனர் என்றும் ஈமச்சின்னங்களில் பல்வேறு வகைகளில் இருப்பதும் ஒரே இடத்தில் பெரியதும் சிறியதுமாக அமைந்திருப்பதும் ஒரே இனக்குழுவில் தலைவருக்கும் மற்றவர்களுக்கு உள்ள வேற்றுமை புலப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வரலாற்று முற்பட்ட காலத்தினை சேர்ந்த மக்கள் பரவல் மாவட்டத்தின் மேற்கு பதிகளில் அதிகமாகவும் வடக்கு நோக்கி செல்ல செல்ல குறைவாகவும் உள்ளன. மலைப்பகுதியும் ஆற்றுப்பகுதியும் வரலாற்றுக்கு முற்பட்ட மக்கள் வசித்த இடங்களாக அமைந்துள்ளன.

2. வரலாற்றுக் காலம் (கி.மு.300 முதல் தற்காலம் வரை)

வரலாற்றுக் காலம் என்பது மனிதன் எழுதத் தொடங்கியதும், அவரது வாழ்க்கையை ஆவணங்களின் மூலம் தெரிந்து கொள்ளக்கூடிய காலம் ஆகும். இந்தியாவில் வரலாற்றுக் காலம் என்பது கி.மு. 2500 ஆண்டு வாக்கில் எழுத்து வடிவ சான்றுகளான கல்வெட்டுகள் கிடைக்கும் காலத்திலிருந்து தொடங்குவதாக கொள்ளலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாற்றுக் கால சான்றுகளாக கல்வெட்டுகள், இலக்கியங்கள், செப்பேடுகள், சமணத்தடங்கள், கோயில்கள், நாணயங்கள் உள்ளிட்ட பல சான்றுகள் கிடைத்துள்ளன.

சங்க காலம்

இரும்பு காலமும் சங்க காலமும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்த நாகரிக காலமாகத் திகழ்ந்ததது. சங்க காலத்தில் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்களாலும், கடையேழு வள்ளல்கள் உள்ளிட்ட ஏராளமான சிற்றரசர்களும் ஆண்டுள்ளனர். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பதினெண்கீழ்கணக்கு, ஐம்பெரும்காப்பியங்கள் ஆகிய நூல்கள் இக்காலத்தில்தான் இயற்றப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் சங்க காலத்தில் தொண்டை மண்டலத்தில் ஒரு பகுதியாக இருந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கே அமைந்துள்ளது தகடுர் நாடு, இந்நாட்டினை ஆட்சி செய்த சங்ககால அதியமானின் குறித்த கல்வெட்டு ஜம்பையிலும் அவர்களின் வழிவந்த பிற்கால அதிகமான் குறித்த கல்வெட்டுகள் செங்கம் பகுதியிலும் கிடைக்கின்றன. தெற்கு பகுதியை ஆட்சி செய்த மலைமான் திருமுடிக்காரியின் எல்லையிலும் தென்கிழக்கு பகுதியில் சிறுபானாற்றுப்படை பாட்டுடைத்தலைவன் நல்லிய கோடன் ஆண்ட கிடங்கில் என்ற திண்டிவனம் பகுதியிலும் வடகிழக்கில் தொண்டைமான் இளந்திரயன் ஆண்ட பகுதியின் மையத்தில் இம்மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஜவ்வாதுமலை என்ற நவிரமலையை மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவன் நன்னன் சேய் நன்னன் ஆண்ட பகுதியும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சங்காலத்தைச் சேர்ந்த ஈயக்காசுகள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் ஆண்டிப்பட்டி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்துள்ளன. ஆய்வில் கிடைத்தில் 143 காசுகளும் ஒரு வகையைச்சேர்ந்தவை. இதில் ஒரு பக்கம் இரண்டு மலைத்தொடர்களும் மறுபக்கம் அதிண்னன் எதிரான் சேந்தன் என்ற 2 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ள கல்வெட்டும் காணப்படுகிறது. இது அப்பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னனாக கருதப்படுகிறது.

செங்கம் பகுதியைத் தலைமையிடமாக கொண்டு சங்க காலத்தில், நன்னன் சேய் நன்னன் என்பவர் ஆண்டுவந்ததையும் அவரின் கொடைத்தன்மை மற்றும் கொடைகள் பெற செல்லும் பாணனுக்கு ஆற்றுப்படுத்தும் விதமாக அமைந்ததையும் குறிப்பிடும் நூல் மலைபடுகடாம் ஆகும். பத்துப்பாட்டில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ள இந்நூலை இரணிய முட்டத்துப் பெருங்குன்றுர்ப் பெருங்கௌசிகனார் என்னும் புலவர் இயற்றியுள்ளார். இதில் நன்னது நவிரமலை, சேயாறு பகுதிகளும் தமிழரின் இசைக்கருவிகள், ஓலைகள், மலைவழித்தடங்கள் என விரிவாக விளக்கியுள்ளது. இப்பாடலில் குறிப்பிடும் நவிரமலை என்பது தற்போதைய ஜவ்வாதுமலையின் ஒரு பிரிவு என்பதற்கும் சேயாறு குறித்தும் கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன. மலைபடுகடாம் குறித்த செங்கம் ரிஷபேஷ்வர் கோயில் கல்வெட்டும், நன்னன் குறித்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கல்வெட்டும் சான்று பகர்கின்றன. எனவே, சங்ககாலத்து தொன்மையும் தொடர்ச்சியும் உடைய மாவட்டமாக திருவண்ணாமலை அமைந்துள்ளது.

சங்க காலத்து கல்வெட்டுச் சான்றுகளாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள மாமண்டூர் குடைவரையை ஒட்டி அமைந்துள்ள சிறு குன்றில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு தமிழிக் கல்வெட்டு அமைந்துள்ளது. இக்கல்வெட்டு இவ்விடத்தில் உள்ள சமணப்படுக்கை செய்வித்த தகவலைத் தருகிறது. இதுமட்டுமல்லாது ஆண்டிப்பட்டியில் 2004 ஆம் ஆண்டு மேற்கொண்ட அகழாயிவிலும் தமிழி எழுத்து பொறிப்புள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

சமணர் படுக்கைகள்:

சமணப்படுக்கை என்பது, பழங்காலத்தில் சமண முனிவர்கள் தங்கி வாழ்வதற்காக பாறைகளைக் குடைந்து அல்லது சமப்படுத்தி உருவாக்கப்பட்ட படுக்கைகளாகும். இவை பெரும்பாலும் மலைகளிலும், குன்றுகளிலும் குடைவரைக் குகைகளில் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் சங்க காலத்தில் வாழ்ந்து வந்த சமணத் துறவிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட கற்படுக்கைகள் கொண்ட 10 க்கும் மேற்பட்ட இடங்கள் இம்மாவட்ட்ததில் உள்ளன. அதில் மாமண்டுர் சமணப்படுக்கை அருகில் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டு உள்ளது. இவை தவிர, சீயமங்கலம், வழுதலங்குணம், கெங்கம்பூண்டி, புதுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சமணக் கற்படுக்கைகள் உள்ளன.

பல்லவர் காலம்

காஞ்சிப்புரத்தைத் தலை நகரமாகக் கொண்டு கி.பி.3 ஆம் நூற்றாண்டிலிருந்து பல்லவர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிறுவி ஆட்சி செய்துள்ளனர். இருப்பினும் கி.பி 6 ஆம் நூற்றாண்டின் இடையில் ஆட்சிக்கு வந்த மூன்றாம் சிம்மவர்ம பல்லவன் (கி.பி.537 – 557) என்ற மன்னரின் காலத்திலிருந்துதான் ஒரு தொடர்ச்சியான பல்லவர் கால வரலாற்றை அறியமுடிகிறது.

குடைவரைகள்

முதன் முதலில் கருங்கல்லில் பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில் அமைக்கும் கலைப்பாணியை முதலாம் மகேந்திரவர்மன் அறிமுகப்படுத்தியாக கருதப்படுகிறது. ஒற்றைக்கல் ரதக்கோயில் கலைப்பானியை முதலாம் நரசிம்மவர்மனும், கட்டுமானக் கலைக் கோயில்கள் கட்டும் பாணியை ராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மனும் தொடங்கி வைத்தனர். தொண்டடை நாடு முழுவதும் இத்தகைய கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 குடைவரைக் கோயில்கள் உள்ளன. அவை, மாமண்டூரில் 4 குடைவரைகள், சீயமங்கலம், குரங்கணில் முட்டம், ஆவூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

இதில் மாமண்டூரில் கிடைத்த முதலாம் மகேந்திரவர்மனின் பல்லவ கிரந்த கல்வெட்டு பல அரிய செய்திகளைத் தருகிறது. இக்கல்வெட்டு மகேந்திரவர்மனின் ஆடல் பாடல்களை உடைய கந்தர்வ சாஸ்த்ரத்தில் தேர்ந்தவன் என்றும், மத்தவிலாசம் மற்றும் பகவத்ஜ்ஜுகம் முதலிய நகைச்சுவை நாடகங்களை இயற்றியவன் என்றும், இசை வல்லுநர் என்பதற்கு இவனது பட்டப்பெயர்களாக நித்யவிநீதம், ஸத்யஸநதன், சத்துமல்லன் போன்ற பெயர்களும் அக்கல்வெட்டில் உள்ளன. சீயமங்கலத்ல் உள்ள பல்லவ கிரந்த கல்வெட்டு அக்கோயிலை உலகின் நற்செயல்களைக் கொண்ட ஆபரணப்பெட்டி என்று வர்ணிக்கிறது. இக்குடைவரைகள் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

கல்வெட்டுகள்

பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுப்பகுதிகளிலும் கிடைக்கின்றன. அவை கோயில் சார்நத தானக்கல்வெட்டுகள் பிரம்மதேசம், உக்கல் போன்ற இடங்களிலும, நீர் மேலாண்மைக்கான தூம்புக்கல்வெட்டுகள் மருதாடு, வழுர், தென்மாத்தூர் ஆகிய இடங்களிலும, நடுகல் கல்வெட்டுகள் செங்கம், தண்டராம்பட்டு வட்டங்களில் பரவலாகவும் வந்தவாசி அடுத்த தேசூரில் 2 நடுகற்களிலும் காணப்படுகின்றன.

செப்பேடு

பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த இரண்டாம் நந்திவர்மனின் செப்பேடு ஒன்று கலசபாக்கம் அடுத்த புல்லூரில் கிடைக்கப்பெற்றது. இச்செப்பேடு வில்வலபுரத்து அதிபதியும் யுராஜனுமான அவனிசந்திரன் வேண்டியபடி பல்குன்ற கோட்டத்து கீழ்வேணாடகத்து சேயாறு நதியின் தென்கரையில் உள்ள நெல்லி, புல்லூர், குடியூர், தக்காறு ஆகிய நான்கு கிராமங்களையும் ஒன்றாகச் சேர்த்துத் தன்னுடைய பெயரால் நயதீரமங்கலம் என்று பெயரிட்டு 108 பிராமணர்களுக்கு நிலங்களை நீர்வார்த்து தானம் செய்தான் என்று குறிக்கிறது. இந்த செப்பேடு அக்கால அரசு மற்றும் சமூக நிலையை அறிய முக்கியச் சான்றாக உள்ளது.

நடுகற்கள்

பல்லவர்கள் காலத்திய நடுகற்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், தண்டராம்பட்டு வட்டங்களில் அதிக அளவில் உள்ளன. இந்நடுகல் கல்வெட்டுகள் சிம்மவர்மன் காலம் முதல் கம்பவர்மன் காலம் வரை, ஆநிரை கவர்தலுக்கும் மற்றும் பிற காரணங்களுக்காகவும் நடைபெற்ற பூசலினால் இறந்து பட்ட வீரர்களின் நினைவாக எடுக்கப்பட்டவையாகும். நடுகற்கள் பகுதியில் இதைப்பற்றி விரிவாக காணலாம்.

சோழர் காலம் (கி.பி. 850 – 1279)

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலம் பொற்காலமாகும். உரையூர், பூம்புகார். ஆகிய இடங்களிலிருந்து ஆட்சி செய்த சங்க காலச் சோழருக்குப் பிறகு தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களைத் தலைநகராகக் கொண்டு அட்சி செய்த மன்னர்களை அறிஞர்கள் பிற்காலச் சோழர்கள் எனக் குறிப்பிடுவர். தொண்டைமண்டலத்தில் உள்ள காஞ்சிபுரமும் பிற்காலச் சோழருக்கு ஒரு முக்கிய தலைநகரமாக விளங்கியது. சோழர்கள் காலத்தில் முதலாம் ஆதித்தயன் முதல் தொடர்ந்து அனைத்து அரசர்களின் கல்வெட்டுகளும் இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் காலத்தில் கோயில் கட்டடக்கலையும் நீர்மேலாண்மையும் ஊர் நிர்வாகமும் உச்சத்தில் இருந்தன. கலை, பண்பாடு, நிர்வாகம், ஆட்சி முறை, ஆட்சிப்பிரிவுகள் என அனைத்தும் சீரிய முறையில் நடைபெற்ற காலமிது. இவர்கள் காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரிய கோயில்களாக திருவண்ணாமலை, கூழமந்தல், மடம், மருதாடு, ஆவூர், செங்கம், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பல கோயில்களை கட்டியுள்ளனர். முதலாம் இராஜராஜன் காலத்தில் தொண்டை மண்டலம் என்ற பெயரை மாற்றி ஜெயங்கொண்ட சோழமண்டலம் என்று இப்பகுதி அறியப்பட்டது.

பரவல்

பிற்கால சோழர்கள் ஆட்சிக்காலம் 9 ஆம் நூற்றாண்டில் விஜயாலய சோழனால் தொடங்கப்பட்டது. அதன் பிறகு முதலாம் பராந்தகன் காலத்தில் வலிமை பெற்ற அரசாக மாற்றம் கொள்ளத் தொடங்கியது. இவர்கள் தமையிடமான தஞ்சாவூரிலிருந்து தனது ஆட்சியை போர் வெற்றிகளால் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்னாடகா பகுதி வரையிலும் பரவியிருந்தது. இவர்கள் வட தமிழகத்து வெற்றிக்குப் பிறகு முதலாம் இராஜராஜன் காலத்தில் தொண்டைமண்டலம் என்ற இப்பகுதியின் பெயரை ஜெயங்கொண்ட சோழமண்டமாக மாற்றினர். திருவண்ணாமலை மாவட்டமும் இந்த ஜெயங்கொண்ட சோழமண்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஆட்சி

சோழர்கள் ஆட்சி இம்மாவட்டத்தில் பரவியிருந்தது என்பதற்கு பல்வேறு கல்வெட்டுகளும் கோயில்களும் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் சோழர்கள் கால தொன்மைக் கல்வெட்டாக முதலாம் ஆதித்தன் கல்வெட்டு காணக்கிடைக்கிறது. தொடர்ந்து முதலாம் பராந்தகன் காலத்து கல்வெட்டு மாவட்டத்தின் அனைத்து வட்டத்திலும் உள்ளன. முதலாம் பராந்தகன் காலத்தில் கோயில்களுக்கு நிலதானம் உள்ளிட்ட கொடைகளுடன் ஏரிகள் அமைப்பது, பராமரிப்பது, வணிகச் செயல்பாட்டிற்கான செக்குகள், நடுகற்கள் என பல் வேறு வகையான கல்வெட்டுகள் இவர் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டுள்ளன. இவை, சோழர் ஆட்சி பரவலையும் ஆட்சி நிர்வாகத்தையும் எடுத்துக் காட்டுகிறது. முதலாம் பராந்தகனை அடுத்து சில காலம் மூனறாம் கிருஷ்ணன் என்ற இராஷ்டிரகூட கன்னர தேவன் கல்வெட்டு காணப்படுகிறது. திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்கள் இவரது ஆட்சி பரவியிருந்தது. இதன் பிறகு முதலாம் இராஜராஜன் ஆட்சியின் போது அமைக்கப்பட்ட கோயில்களும் அக்கோயில்களை நிர்வாகம் செய்ய ஏற்படுத்தப்பட்ட கொடைக் கல்வெட்டுகள் அதிக அளவில் கிடைக்கின்றன. சோழர் அரசாட்சியின் உச்சமாக முதலாம் இராஜராஜன் காலத்தைக் குறிப்பிடலாம். தொடர்ந்து முதலாம் இராஜேந்திரன், குலோத்துங்கன் சோழன் உள்ளிட்ட அனைத்து சோழ அரசர்களின் கல்வெட்டுகளும் இம்மாவட்டத்தில் கிடைக்கப்பெறுகின்றன.

கோயில்கள்

கோயிற்கலையின் உச்சம் பெற தொடங்கிய காலமாக சோழர்கள் காலத்தை ஆய்வாளர்கள் கருதுவர். திருவண்ணாமலை மாவட்டத்தில் சோழர்கள் காலத்தில் கட்டப்பெற்ற கோயில் 12 வட்டங்களிலும் உள்ளன. மலைப்பகுதியான ஜமுனாமரத்தூர் வட்டதிலும் சோழர்கள் காலக் கோயில் அமைந்துள்ளன. சோழர்கள் கால கோயிலுக்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளவை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், செங்கம் இடபந்துறை நாயனார் கோயில், தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோயில், மடம் தடாகபுரிஸ்வரர் கோயில், பழங்கோயில், திருமலை, பிரம்மதேசம், மருதாடு போன்ற ஊர்களில் உள்ள கோயில்களாகும். கூழமந்தல் கங்கை கொண்ட சோழிஸ்வரர் கோயில் முதலாம் இராஜேந்திர சோழனின் குருவான ஈசான சிவ பண்டிதர் எழுப்பிய கோயில் இக்கோயில் சோழர்களின் கால கோயிலில் தனிச்சிறப்பு பெற்றதாகும்.

பாண்டியர்கள் (1216 – 1362)

தமிழகத்தில் சோழர் பேரரசு ஆட்சி முடிவுற்றவுடன் முதலாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியன்(கி.பி.1216-1244), முதலாம் ஜடாவர்மன் சுந்தரப்பாண்டியன்(கி.பி.1253-1284), முதலாம் மாரவர்மன் முலசேகர சுந்தரப்பாண்டியன்(கி.பி. 1268-1318) ஆகிய பாண்டிய மன்னர்கள் சோழர்களைத் தொற்கடித்துச் சோழ நாடு, தொண்டை நாடு ஆகியவற்றைக் கைப்பற்றி இரண்டாம் பாண்டியப் பேரரசை நிறுவினர். இவர்களின் ஆட்சி மதுரை முதல் வடக்கே நெல்லூர் வரை பரவியிருந்தது. தொண்டை மண்டலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்தை அறிய திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் உள்ள கோயில்களில் பல்வேறு பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள் அமைந்துள்ளன, இவை அக்கோயிலுக்கு அளித்த தானங்களும் கோயில் விரிவாக்கப்பணியில் பாண்டியர்கள் பங்கு குறித்தும் விரிவாக விளக்குகின்றன.

போசளர்கள்:

போசள மன்னர் மரபில் வீரசோமேஸ்வரனின் மகன் மூன்றாம் வீரவல்லாளதேவர் (கி.பி.1290-1343) என்ற போசள மன்னர் போசள அரசு முழுவதற்கும் மன்னராகி துவாரசமுத்திரத்தில் இருந்து ஆட்சி செய்தார். அத்துடன் திருவண்ணாமலையில் மற்றொரு தலைநகரத்தை அமைத்துக் கொண்டு தமிழகப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தினார். இவர் பாண்டியருடன் சேர்ந்து மதுரை சுல்தானியப் அரசை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இம்மன்னனின் கல்வெட்டு திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் பகுதியில் கிடைக்கின்றன.

சம்புவராயர்கள்:

சோழர் ஆட்சிக் காலத்தில் தற்போதைய வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கற்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் சம்புவராயர் என்னும் மரபினர் சிற்றரசர்களாக ஆட்சி செய்துள்ளனர். சோழர்களின் வீழ்ச்சி காலத்தில் இவர்கள் தனியரசு அமைத்து ஆளத்தொடங்கினர். மூன்றாம் ராஜராஜனின் அட்சி காலத்தில் இராஜ கம்பீரச்சம்புவராயர் என்பவர் படைவீடு, திருமலை, விரிஞ்சிபுரம் பகுதியில் (கி.பி.1236-1240) சிற்றரசராக இருந்துள்ளார். இவர் கி.பி.1258-ல் போளுருக்கு அருகே படைவீடு என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு தன் ஆட்சியை நிறுவினார். படவேடு, ஆரணி, குன்னத்தூர், திருவண்ணாமலை, செய்யாறு, சீயமங்கலம் ஆகிய பகுதியில் சம்புவராயர்கள் கல்வெட்டு கிடைக்கின்றன. படைவீடு பகுதியல் இன்றும் சம்புவராயர்கள் கோட்டை, கோயில் இடிபாடுகள் காணலாம்.

விஜயநகர மன்னர்கள்:

கி.பி.1336-ல் அரியரன் - புக்கன் உடன் பிறப்பினர் விஜயநகர அரசைத் தோற்றுவித்தனர். தமிழகத்தை தன் அட்சியின் கீழ் கொண்டு வர இவர்கள் விரும்பினர். விஜயநகர மன்னர்கள் சம்புவராயர்களின் முழுவதையும் கைப்பற்றிக் கொண்டனர். என்பதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இப்பணியிலீடுபட்டவர்கள் புக்கனின் மகன் கம்பணனும், கம்பணின் மகன் வீரசாயணனும் கம்பணனின் தளபதிகளும் ஆவர். கீழ்பென்னாத்தூர் பகுதியில் இவர்களைப்பற்றிய கல்வெட்டுகள் அதிக அளவு திருவண்ணாமலை, படைவீடு, தேவிகாபுரம், நெடுங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்ற பகுதிகளிலும் பரவலாக கிடைக்கின்றன.

நாயக்க அரசர்கள் காலம்

விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்காலம் 1565 தலைக்கோட்டைப் போரின் போது முடிக்வுக்கு வந்தாலும் அவர்களைத் தொடர்ந்து நாயக்க மன்னர்கள் ஆட்சி இப்பகுதியில் நடைபெற்றது. வேலூர் நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்களும் உள்ளூர் நாயக்கர்கள் பலரும் இப்பகுதியில் ஆட்சிபுரிந்தனர். இவர்களது ஆட்சி மையப்படுத்தப்பட்ட ஒன்றாக அமையவில்லை. அங்கங்கு ஒரு நாயக்க மன்னர்கள் இருந்துள்ளனர்.

ஆற்காடு நவாப்

கி.பி. 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கருநாடக பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் இன்றைய ஆற்காடு ஆகும். தமிழக வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற இவர்கள் கருநாடக நவாப்புகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆட்சியின் பொழுதுதான் ஆங்கிலேயேர்கள் முகலாய ஆட்சியாளர்கள் உதவியுடன் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தனர். முகலாயர்களின் போர்ப்படை தளபதியாவும் கப்பம் வசூலிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் தான் நவாப்புகள் முகலாயர்களின் ஆட்சி முடிவுக்குப்பிறகு இவர்கள் தமிழகத்தின் வடமாநிலங்கள் அனைத்தையும் ஆட்சி செய்தனர், அவ்வகையில் திருவண்ணாமலைப் பகுதியும் இவர்கள் ஆட்சியில் அடங்கும்.

ஆற்காடு நவாப்வின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் விளங்கியது. இவர்களது கால கல்வெட்டுகள் நவாப்புகள் பெயரால் அமைந்த கலசபாக்கம் வட்டம் நவாப்பாளையத்தில் கிடைகிறது.

ஆங்கிலேயரகள் ஆட்சிகாலம்;

ஆற்காடு நவாப்புகளும் பிரெஞ்சுகாரா் மற்றும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே கா்நாடகப்போர் நடை பெற்றன. இதன் ஒரு பகுதியான போர்கள் 1751 இல் ஆரணியிலும், 1760 இல் வந்தவாசியில் நடைபெற்றன. வந்தவாசி போர் வெற்றியினைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் ஆங்கிலேயர வசமானது. இறுதியில் பிரெஞ்சுகாரா்களையும், நவாப்புகளையும் ஆங்கிலேயர்கள் தோற்கடித்ததுடன் நவாப்புகளிடமிருந்து 1801 இல் கா்நாடகத்தை ஆளும் அதிகாரத்தையும் பெற்றனா். 1760 ல் திருவண்ணாமலையை கேப்டன் ஸ்டெபன் ஸ்மித் கைப்பற்றினார்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் ஆரம்பத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நடைபெற்றது. 1857 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலகத்தின் விளைவாக இந்தியாவில் நேரடியான ஆங்கிலேய அரசின் ஆட்சி தொடங்கியது. இவர்கள் காலத்தில் புதிய மாவட்டங்கள், வட்டங்களை உருவாக்கி நிலஅளவை செய்து அனைத்து நிர்வாகத்தையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இவர்கள் காலத்தில் கல்வி, மருத்துவம், சட்டம், தொல்லியல் ஆய்வு, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் என நவீன இந்தியா உருவாகிவந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இவர்கள் காலத்தில் மிஷனரி பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. இதன் மூலம் ஆரம்பக்கல்வி, உயர்நிலைக்கல்வி அனைவருக்கும் கிடைக்கப்பெற்றன. திருவண்ணாமலை டேனிஷ் மிஷ்ன் பள்ளி ஒரு முக்கியச் சான்றாகும். 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் அரசு பள்ளிகள் ஏற்படுத்தப்பட்ட கல்வி பணிகளைச் செய்து வருகின்றன. இம்மாவட்டத்தில் 100 ஆண்டுகள் கடந்த பள்ளிகள் உள்ளன.

சான்று

தொல்லியல்துறைனரின் ஆய்வேடுகள் (Indian archaeology – A Review) ,

Archaeological Gazetteer of Tamil Nadu,, K. Rajan

Archaeology of Palar Basin. K Rajan,

ஆவணம் இதழ் ?

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபமலர், 2017, 2018 மாவட்ட நிர்வாகம்.

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கண்டுபிடிப்பு செய்திகள்- நாள்-

மீகொன்றை நாடு- தண்டராம்படு வட்டத் தடயங்கள், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம், 2025