அறிமுகம்
தமிழ்நாட்டில் நடுகற்கள் பரவலும் அதன் தன்மையும் தனித்துவமானவை. வடதமிழ்நாட்டில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவிலும், கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளில் அதிக அளவிலும் கொங்குப்பகுதி, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நடுகற்கள் கண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. திருச்சிக்குக் கிழ் தென்பகுதியில் ஒப்பீட்டளவில் குறைவான நடுகற்களே காணப்படுகின்றன. நெல்விளையும் மருத நிலப்பகுதியான தஞ்சைப்பகுதியில் நடுகற்கள் மிகக்குறைவாக உள்ளன. நடுகற்கள் அதிகம் உள்ள பகுதியாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் அமைந்துள்ளன.
இலக்கியச் சான்றுகள்
தமிழ்நாட்டின் இலக்கியத்தின் பொற்காலம் எனக் கருதப்பட்ட சங்ககாலத்தில் தொகுக்கப்பட்ட இலக்கிய நூல்கள் பலவற்றில் நடுகற்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதற்கும் முன்பே படைக்கப்பட்ட தொல்காப்பியத்தில் நடுகல் அமைப்பதற்கான இலக்கணத்தையும் பதிவு செய்துள்ளது. நடுகற்கள் இறந்து போன அனைவருக்கும் வைக்கப்படுவது மரபன்று. போர் வீரர்களுக்கும் ஆநிரைகளைக் காத்தவர்களுக்கும் செயற்கரிய செயல்களை செய்தவர்களுக்கும் நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்துள்ளது.
தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியலில் போரில் மடிந்த வீரர்க்கு நடுகல் நடுவது பற்றி இவ்வாறு கூறப்படுகிறது.
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் (சீர்த்த மரபில் பெரும்படை) வாழ்த்தலென்று இருமூன்று மரபில் கல்.
போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவனுடைய வீரத்தைப் போற்றினார்கள். அதற்குரிய கல்லை, மலைக்குச் சென்று தேர்ந்தெடுத்து, அதைக் கொண்டுவந்து நீரில் இட்டு நீர்ப்படை செய்து பிறகு, அந்த வீரனுடைய பெயரையும் புகழையும் அக்கல்லில் எழுதி, அதை நட வேண்டிய இடத்தில் நட்டு, நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து சிறப்பு செய்து வாழ்த்துவார்கள்.
பழந்தமிழர் போரைப் பற்றித் தனி இலக்கணம் எழுதினார்கள். போரைப் பற்றிய இலக்கியங்களும் இருந்தன. அவற்றிற்குப் புறப்பொருள் என்று பெயரிட்டிருந் தார்கள். தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூல்களும், புறநானூறு போன்ற இலக்கிய நூல்களும் தமிழில் உண்டு. போர்முறையை ஏழு விதமாகப் பிரித்திருந்தார்கள். அதில் நிரை (பசு மந்தை) கொள்ளுதல் வெட்சி என்றும், நிரைமீட்டல் கரந்தை என்றும் பெயர் பெற்றன.
நடுகற்களின் அமைப்பும் சூழலும்
தமிழகத்தில் கண்டறிந்து ஆவணப்படுத்தப்பட்ட பெரும்பான்மையானவை நடுகற்கள் ஊரின் வெளிப்புறத்தில் தனித்த இடத்திலோ, ஏரி அல்லது ஆற்றின் கரையிலோ, காட்டுப்பகுதியிலோ அதிகமாக அமைந்துள்ளன. பாறையிலிருந்து வெட்டப்பட்ட ஒரு பலகைக்கல்லில் ஒரு புறம் இறந்த வீரனின் உருவமும் உருவத்தைச் சுற்றி கல்வெட்டுகளும் பொறிக்கும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. நடுகற்கள் அமைக்கும் போது எளிமையான முறையில் நடுகல்லை மட்டும் வைத்து வழிபடும் நிலையில் இருந்தது. காலப்போக்கில் நடுகல்லுக்கு சிறிய அளவிலான கோயில்களைக் கட்டி வழிபடும் வழக்கம் வந்தது. நடுகல்லுக்கு மேலே கூரை அமையாது, அதைச்சுற்றி கோயில் கட்டி வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது. நடுகல் கோயில் மரத்தடியில் அமையப்பெற்றிருக்கும், சுற்றிலும் மரமும் செடியும் கொண்டும் முன்புறம் ஒரு மணியும் அமைந்திருக்கும். வேண்டுதலுக்காக வைக்கப்பட்ட மண்குதிரைகள், மண் யானைகள், வேல்கள் என நடுகல்லைச் சூழ்ந்து நாட்டார் மரபிலான தோற்றம் அமைந்திருக்கும். அண்மைக்காலத்தில் நடுகல் கோயில்கள் வைதீக கோயில்கள் போன்று பெரிய அளவில் கட்டி குடமுழுக்கு செய்து பிராமணர்களைக் கொண்டு வழிபாடு நடத்தும் நிலையும் வரத்தொடங்கியுள்ளது.
இறந்த வீரனின் உருவம் சண்டையில் இறந்த போது இருந்த தோற்றத்திலே அமைக்கப்பட்டுள்ளது. உடல் நிறைய அம்புகள் பாய்ந்த நிலை, கையில் கத்தி, குறுவாள், வில், அம்பு வைத்திருக்கும் நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். சில நடுகற்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்களின் உருவம் காணப்படலாம். உருவத்துடன் மாடு, போரிட்ட புலி உள்ளிட்ட விலங்குகள், இறந்தவருக்கு படைக்கும் படையல் பொருட்களாக சிமிழ், கெண்டி. சில இடங்களில் சிவலிங்கம் ஆகியனவும் இருக்கும்.
நடுகல் ஆய்வுகள்
தமிழகத்தில் நடுகற்கள் என்ற தொல்லியல் சின்னம் பற்றிய ஆய்வுகள் 1970க்குப் பிறகே தொடங்கியது. தமிழக தொல்லியல் துறையில் பயிற்ற ஆய்வு மாணவரால் தகவல் பெற்ற துறையினர் செங்கம் – தருமபுரி பகுதிகளில் நடுகல் ஆய்வுகளை மேற்கொண்டனர். தொடர்ந்து நடந்த ஆய்வுகளில் 100க்கும் மேற்பட்ட நடுகற்களை கண்டறிந்தனர். இந்த நடுகற்கள் தமிழக வரலாற்றில் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. பல்லவர்கள் காலத்திலிருந்து சோழர்கள் காலம் வரையிலான இந்நடுகற்கள் உள்ளூர் வழக்கு, பெயராய்வுகள், சிற்ப அமைதி, வட்டெழுத்துக் கல்வெட்டுகள் மூலம் புதிய சமூக, வரலாற்று ஆய்வினை தொடங்க காரணமாக இருந்தது. இந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட நடுகற்களை செங்கம் நடுகற்கள் என்றும் தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள் என்ற பெயரிலும் நூலாக வெளியிடப்பட்டது. தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயம் தோன்றியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடுகற்கள் அமைந்துள்ள இடங்களை கீழ்வருமாறு நிலவியல் அடிப்படையில் பிரிக்கலாம்.
செங்கம் – தண்டராம்பட்டு பகுதிகள்
தமிழகத் தொல்லியல் துறையின் ஆய்வுகள் மூலம் 1970 களில் வெளிக்கொணரப்பட்ட நடுகற்கள் தமிழக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தன. இப்பகுதியில் பல்லவர்கள், சோழர்கள் கால நடுகற்கள் பெருமளவு கண்டறிந்து ஆவணப்படுத்தப்பட்டன. இப்பகுதிகள் பண்டைய நாட்களில் முல்லைப் பகுதியாக இருப்பதால் இயல்பாகவே இனக்குழுக்களும் மேய்ச்சல் தொழிலும் பரவலாக இருந்ததால் இங்கு நடுகற்கள் அதிகமாக காணப்படுகின்றன. இந்நடுகற்களில் பெருங்குளத்தூர் வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் காலத்தால் முற்பட்டதாகும். சிம்மவர்மன் காலத்தைச் சேர்ந்த இந்த நடுகல் தொண்டமானூர், கொட்டையூரில் உள்ள நடுகற்களும் காலத்தால் முற்பட்டவை. இந்த நடுகற்களில் உள்ள கல்வெட்டுகள் ஆநிரை கவரும் போது ஏற்பட்ட பூசலில் இறந்து போன வீரர்களுக்கு வைக்கப்பட்ட நடுகற்களாக அமைந்துள்ளன. இவ்வகையான நடுகற்கள், செங்கம், தொரப்பாடி, படிஅக்ரகாரம், தா.வேளூர், தண்டராம்பட்டு, கீழ்ராவந்தவாடி, எடத்தனூர், போந்தை, மோத்தக்கல் உள்ளிட்ட பல இடங்களில் உள்ளன.
ஜவ்வாதுமலை
திருவண்ணாமலை மாவட்டத்தின் தெற்கு மற்றும் மேற்குப்பகுதியின் எல்லையாக அமைந்துள்ள ஜவ்வாதுமலையில் சுமார் 50 நடுகற்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இம்மலை திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்ட எல்லையிலும் அமைந்துள்ளது. திருவண்ணாமலை பகுதியில் மேல்பட்டு, கோவிலூர், கீழ்கோவிலூர், கீழப்பழங்கோட்டை, வீரப்பனூர், பெருமுட்டம், கூட்டாத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள்ளன. இந்நடுகற்களில் புலி குத்தி இறந்த வீரர்களுக்கும் ஊர்காக்கும் போது இறந்த வீரர்களுக்கும் ஆநிரை கவரும் போது ஏற்பட்ட பூசலிலும் இறந்த வீரர்களுக்கு வைக்கப்பட்ட நடுகற்களாகும். இம்மலையில் கிடைக்கும் பல நடுகற்கள் கல்வெட்டுடன் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கலசபாக்கம் – போளூர் பகுதிகள்
ஜவ்வாதுமலையடிவாரப்பகுதியான கலசபாக்கம் – போளூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் கல்வெட்டு எழுத்துப்பொறிப்பில்லாத நடுகற்கள் காணக்கிடைக்கின்றன. கலசபாக்கம் வட்டத்தில் மலையடிவாரப்பகுதியான மேல் சோழங்குப்பம் முதல் அவ்வட்ட எல்லையான லாடவரம் வரை ஊருக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் நடுகற்கள் காணப்படுகின்றன. போளூர் வட்டத்திலும் பரவலாக ஒவ்வொரு ஊருக்கும் கல்வெட்டு இல்லாத நடுகற்கள் காணக்கிடைக்கின்றன. போளூர் அடுத்த குன்னத்தூர் நடுகல், வெண்மணி நடுகல், மேல்சோழங்குப்பம் நடுகல் ஆகியவை எழுத்துடன் அமைந்த நடுகற்களாகும்.
திருவண்ணாமலை – கீழ்பென்னாத்தூர்.
திருவண்ணாமலைக்கு மேற்கே அமைந்துள்ள செங்கம் – தண்டராம்பட்டு பகுதியில் பரவலாக காணப்படும் நடுகற்கள் திருவண்ணாமலை நகருக்கு வடக்கு மற்றும் கிழக்குப்பகுதியில் எண்ணிக்கையில் குறைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் முல்லை திணைக்குரிய வாழ்வியல் அமையாது மருதத்திணைக்குரிய பகுதியாக இருப்பதால் இங்கு கால்நடை சமூகம் மற்றும் அதன் பண்பாட்டுத் தொடர்ச்சி குறைவதால் நடுகற்களும் இங்கு குறைவாக உள்ளன. திருவண்ணாமலை வேடியப்பன் கோயில், சொரகுளத்தூர், ராந்தம் ஆகிய இடங்களில் பல்லவர்கள் காலநடுகற்களும் கீழ்பென்னாத்தூர் அருகே கொளத்தூர், காட்டுமலையனூர் ஆகிய இடங்களில் பல்லவர்கள் கால நடுகற்களும், கரிகிலாம்பாடி மற்றும் கொளத்தூர் ஆகிய இடங்களில் சோழர்கள் கால நடுகற்களும் காணக்கிடைக்கின்றன.
வந்தவாசி - செய்யார்
தொண்டைமண்டலத்தின் தலைமையிடமான காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள வட்டங்களான வந்தவாசி, செய்யார், வெம்பாக்கம் பகுதிகளில் மிகக்குறைந்த அளவு நடுகற்களே உள்ளன. இதில் குறிப்பிடத்தக்க நடுகல்லாக தேசூர் பல்லவர்கள் காலநடுகல் அமைந்துள்ளது.