Temples

கோயில்கள்

உலகம் முழுக்க உள்ள கோயில் அந்தந்த நாட்டின் பண்பாட்டு கருவூலமாகும். கலை, பண்பாடு, மொழி, சிற்பம், இசை, தத்துவம், ஆன்மிகம், இலக்கியம் என மனித வாழ்வில் பிரிக்க முடியாத கலை வடிங்களுக்கு ஊற்றுக்கண்களாக திகழ்வது கோயில...

உலகம் முழுக்க உள்ள கோயில் அந்தந்த நாட்டின் பண்பாட்டு கருவூலமாகும். கலை, பண்பாடு, மொழி, சிற்பம், இசை, தத்துவம், ஆன்மிகம், இலக்கியம் என மனித வாழ்வில் பிரிக்க முடியாத கலை வடிங்களுக்கு ஊற்றுக்கண்களாக திகழ்வது கோயில்கள். இந்தியா என்ற பெரும் நிலப்பரப்பு முழுவதும் இந்து, சமண, புத்த கோயில்கள் நிறைந்துள்ளன. இவை இந்தியாவின் உயிர்நாடியான அமைப்புகளாகும். அனைத்து சிந்தனை மரபுகளும் இந்த கோயில் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளிலிருந்தே தொடங்குகின்றன.

தமிழகம் கோயில்களின் மாநிலம் என்றால் மிகையாகாது. இந்த மாநிலத்தின் முழு பரப்பிலும் மலைகளிலும் கடற்கரைகளிலும் காடுகளிலும் கூட கோயில் இருக்கின்றன. சுமார் 30000 புராதனக்கோயில்கள் இம்மாநிலத்தில் உள்ளன. சுமார் 2000 ஆண்டுகளாக சங்க இலக்கிய காலத்தில் இருந்து மிக எளிமையாக கோயில்களாக உருகொண்டு காலப்போக்கில் பெருங்கோயில்களாக உருமாறியது.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை கால வரிசைப்படி சங்க காலக்கோயில், பல்லவர்கள் கால கோயில், சோழர்கள் கால, பாண்டியர்கள் கால கோயில், விஜயநகர நாயக்கர்க கால கோயில் என்று காலவரிசைப்படியும் மரத்தடி கோயில்கள், நடுகல் கோயில்கள், குடைவரை கோயில்கள், கற்றளி கோயில்களும் செங்கல் தளி கோயில்களும் என பல வகையான கோயில்கள் அமைந்துள்ளன. கோயில் அதன் தன்மையைப் பொருத்து மாடக்கோயிக்லள், கரக்கோயில், ஞாழக்கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், தூங்கானை மாடக்கோயில் என பலதிறப்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. அவை

குடைவரைக்கோயில்

மாமண்டூர்

வெம்பாக்கம் வட்டம் மாமண்டூர் ஏரியின் கரையாக அமைந்திருக்கும் குன்றுத்தொடர் நரசமங்கலம் மற்றும் மாமண்டூர் கிராம எல்லையில் சரிபாதியாக அமைந்துள்ளது. முதலிரண்டு குடைவரைகள் மாமண்டூர் கிராம எல்லையிலும மூன்று மற்றும நான்காவது குடைவரை நரசமங்கலம் எல்லையிலும் அமைந்துள்ளன. தென்வடலாக உயர்ந்து விரியும் இக்குன்றுத் தொடரின் பின்புறம் முதலாம் மகேந்திரவர்மரால் உருவாக்கப்பட்ட “சித்திரமேகத் தடாகம்” அமைந்துள்ளது. கடினமான பாறையைக் குடைந்து குடைவரைகளை அமைக்கும் பணியை மகேந்திர வர்மனின் காலத்தில் தொடங்கியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இங்கு நான்கு குடைவரைகள் அமைந்துள்ளன. தெற்கு வடக்காக நீண்டிருக்கும் மலைக்குன்றின் வடகோடியில் அமைந்துள்ளது முதல் குடைவரை. இக்குடைவரையில் முதலாம் மகேந்திரவர்மனின் பல்லவ கிரந்த கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு மகேந்திரவர்மனின் ஆடல் பாடல்களையுடைய கந்தர்வ சாஸ்த்ரத்தில் தேர்ந்திருந்தான் என்பதும் மத்தவிலாஸம் மற்றும் பகவதஜ்ஜுகம் முதலிய நகைச்சுவை நாடகங்கள் உள்ளிட்ட பல நாடகங்களை இயற்றியவன் என்பதும், இவனுடைய நாடகம் வால்மீகி வர்ணித்தபடி பரதனை நாயகனாகக் கொண்டது மற்றொன்று அவையில் பாஞ்சாலியின் ஆடை களைவதைக் கருவாகக் கொண்டது. ஊர்வசியின் கதையை மையமாக வைத்து மற்றொரு நாடகத்தையும் இயற்றியிருக்க வேண்டும். தக்ஷணணசித்ரம் என்னும் நூலும் இவர் இயற்றியிருக்க வேண்டும் இசைக்கருவிகளிலும் தேர்ந்தவராக இருக்கவேண்டும் நித்யவிநீதம், ஸத்யஸந்தன் மற்றும் சத்ருமல்லன் ஆகிய விருதுப்பெயர்கள் இக்கல்வெட்டில் பயின்று வருவதால் இது மகேந்திரவர்மனின் கல்வெட்டாகவே கருதலாம். இக்கல்வெட்டில் இறைவன் பெயர் உத்திர வாலிஸ்வரர் என்று குறிப்பிடுகிறது.

இரண்டாவது குடைவரையில் முழுமையான குடைவரையாக அமைந்துள்ளது. இதில் முதலாம் பராந்தகன் கல்வெட்டும் முதலாம் இராஜராஜன் கல்வெட்டும் உள்ளது. இந்த கல்வெட்டில் இம்மலைக்கு அருகில் உள்ள ஏரியை சித்திரமேக தடாகம் என்று குறிப்பிடுகிறது. மூன்றாம் குடைவரை பாதி மலையில் அமைந்துள்ளது. 7 மூலவர்கள் சந்நிதியுடன் அமைந்துள்ள இந்த குடைவரையில் எந்த இறை உறுவங்களும் இல்லை. முழுமை பெறாத குடைவரையாக உள்ளது. நான்காவது குடைவரை பாதியளவில் உள்ளது. முழுமைபெறவில்லை. இந்த குடைவரைக்கு வடக்குப்பக்க குன்றில் சமணப்படுக்கைகளும் கிபி. முதலாம் நூற்றாண்டு தமிழிக்கல்வெட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

சீயமங்கலம்

வந்தவாசி வட்டம் தேசூர் அருகே உள்ள சீயமங்கள்ம குடைவரை மகேந்திரவர்ம பல்லவனின் மற்றொரு அற்புதமான படைப்பு சீயமங்கலம் குடைவரையாகும். மேற்கு பார்த்த இந்த குடைவரை கோயிலில் உள்ள இறைவன் தூணாண்டார் என்று அழைக்கப்படுகிறார். இக்குடைவரையில் புடைப்புச் சிற்பமாக தமிழகத்தின் முதல் ஆடவல்லானான நடராஜர் சிற்பமும் ரிஷபாந்திகர் சிற்பமும் அமைந்துள்ளது. இந்த குடைவரையின் உள்ள பல்லவ கிரந்த கல்வெட்டு இக்கோயிலை அவனிபாஜன பல்லவேஸ்வரம் என்றும் இக்கோயிலை உலகின் நற்செயல்களைக் கொண்ட ஆபரணப் பெட்டி என்று அழைக்கிறது. இக்கோயில் சோழர்கள், விஜயநகர மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டு அழகுமிகு கோயிலாக அமைந்துள்ளது.

குரங்கணில் முட்டம்

திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலமாக அமைந்துள்ளது குரங்கணில் முட்டம் இதே ஊரில் கல்மண்டபத்து ஆழ்வார் என்ற குடைவரை சிவன் கோயிலும் அமைந்துள்ளது. 7 கருவறைகள் கொண்ட இந்த குடைவரைக்கோயில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தியது ஆகும். இந்த குடைவரைக் கோயிலிலும் பல் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.

ஆவூர்

வேட்டவலம் திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள ஆவூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் சிறிய குடைவரைக்கோயில் ஆகும். இக்கோயில் இறைவன் கருமாணிக்கத்தாழ்வார் என்று அழைக்கப்படுகிறார்.

கற்றளி கோயில்

முழுவதும் கல்லால் கட்டப்பெற்ற கோயில்கள் கற்றறிக்கோயில்கள் ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பெற்ற பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் கோயிலும் கூழமந்தலில் சோழர்களால் கட்டப்பெற்ற கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயிலும் கற்றளிக்கு சிறந்த சான்றாகும். கருவறை, விமானம், சிற்பங்கள், முன்மண்டபம், மகாமண்டபம் என அனைத்தும் கற்களால் செய்யப்பட்ட கோயில் ஆகும்.

கட்டுமானக் கோயில்

கட்டுமானக் கோயில் என்பன கல், செங்கல், மரம் மற்றும் இதர உலோகங்களைக் கொண்டு கட்டப்படும் கோயில் ஆகும். இவ்வகை கோயில்களை இம்மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. திருவண்ணாமலை, தேவிகாபுரம், செங்கம், நெடுங்குன்றம் உள்ளிட்ட கோயில்களை இந்த வகையில் அழைக்கலாம்.